Advertisement

மதுரை கறிதோசை சால்னா

இன்றைய சமையல் பகுதியில் மதுரை ஸ்பெஷல் கறிதோசை சால்னா செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை : எலும்பு & கறியுடன் மட்டன் – 300 கிராம், துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் -1 & தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்றரை டீஸ்பூன், மல்லி தூள் – ஒன்றரை டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க : மிளகு – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கசகசா – 1/4 ஸ்பூன், முந்திரிக் குருணை – 2 tbs, தேங்காய் துருவல் – 4 tbs.

தாளிக்க : எண்ணெய் – 3 டீஸ்பூன், ஏலக்காய் – 2, கல்பாசி – 1/4 டீஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 1/2 இஞ்ச், பிரியாணி இலை – 1

(மட்டன் துண்டுகள் மற்றும் துவரம் பருப்பை நன்குக் கழுவி தனித் தனியாக வைத்துக் கொள்ளவும்.)

செய்முறை: அரைக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு நீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து வைக்கவும் பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் / மிளகாய் / மல்லித் தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர வதக்க வேண்டும். பின்பு அதில் கழுவி வைத்துள்ள மட்டன் சேர்த்து 4 நிமிடங்கள் நன்கு கிளறி..

அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 8 விசில்கள் வரும் வரை வேகவிடவும். பின்பு இறக்கி வைத்து குக்கரை திறந்து நன்கு கிளறி மீண்டும் குக்கரை மூடாமல் 2 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். அது கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து..

பச்சை வாசம் போக குழம்பை நன்கு ஒரு கொதி திரண்டதும் இறக்கி, மல்லித்தழைகள் தூவினால், ருசியான கமகம மதுரை கறிதோசை சால்னா ரெடி! கறி தோசைக்கு சால்னாவை கெட்டியாக வைக்கவும். கறி தோசைக்கு கறித்துண்டு இன்றி வெறும் குழம்பு மட்டும் போதும்!

குறிப்பு : முந்திரிக் குருணை இல்லாவிட்டால் வறுத்த தோல் நீக்கிய நிலக்கடலை சேர்க்கவும். இங்கு கொடுத்துள்ள செய்முறை அதிக காரம் இல்லாதது! கறி தோசைக்கு இந்த சால்னாவை வைத்தால் மிளகு, மிளகாய் தூள், பச்சை மிளகாய் அளவை 2-3 மடங்கு உயர்த்திக் கொள்ளவும்! இதே செய்முறையில் செய்தால்..

கறி தோசைக்கு மட்டுமின்றி இட்லி, தோசை, ஆப்பம் இடியாப்பம் புரோட்டா, சப்பாத்திக்கும் இந்த சால்னா சிறப்பாக இருக்கும்! இட்லி மட்டும் கொதிக்க கொதிக்க மென்மையாக கொடுத்துவிட்டால் இந்த சால்னாவுடன் 1 டஜன் இட்லியை ஒவ்வொருவரும் சாப்பிடுவார்கள் என்பதற்கு வாழும் உதாரணம் நானே!

கடைக்கு இந்த சால்னா வைப்பது எனில் 4 பச்சை மிளகாயை நான்காகக் கீறி இதில் (இந்த 300 கிராம் கறி அளவு சால்னாவிற்கு) வதக்கி சேர்க்கவும். உங்கள் கடையின் உணவு விலையைப் பொறுத்து முந்திரிக் குருணை சேர்க்கவும்! இல்லாவிட்டால் நிலக்கடலையே போதும்!

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *