தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அன்று அதிகாலை மலைக்கோயிலில் கொடியேற்றும் விழாவும் நடைபெற்றது. மாலையில் குமரனை, திருமலைக்கோயிலில் இருந்து பண்பொழிக்கு அனுப்பும் பிரிவு உபசார விழாவும் இரவில் அன்ன கொடியேற்று விழாவும் நடைபெற்றது.

பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகளும், சுவாமி வீதி உலாவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவின் 7ஆம் நாளான பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமை காலையில் சண்முகர் அழைப்பும், மதியம் முருகர் – சண்முகர் எதிர்சேவை காட்சி விழாவும் நடைபெறும். விழாவின் 9ஆம் நாளான பிப்ரவரி 10ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறும். விழாவின் 11ஆம் நாள் குமரன் மலைக்கோயிலுக்கு திரும்பும் விழாவும் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், உபயதாரர்கள், பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Leave a Reply