தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் தற்போது ராணுவத்தில் அசாமில் பணியாற்றி வரும் நிலையில், இவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 10 சவரன் நகை காணாமல் போயிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ராணுவ சீருடையுடன் வந்த இசக்கிராஜா மற்றும் அவரது மனைவி கை குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் .
ராணுவ வீரருக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும், குறிப்பாக பல புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் கூறி ராணுவ வீரரான இசக்கி ராஜா மற்றும் அவரது மனைவி குழந்தை உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரிடம் காவல்துறையினர் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய சமரசமாகாத ராணுவ வீரர் இசக்கி ராஜா சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் உடனடியாக ராணுவ வீரரை அழைத்து வருமாறு உத்தரவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இசக்கி ராஜா தனது புகார் மனுவை அளித்தார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய நிலையில் இசக்கி ராஜா தனது மனைவி குழந்தையுடன் போராட்டத்தை கைவிட்டு திரும்பினார்.















Leave a Reply