கடையநல்லூரில் காசநோயால் பெண் திடீரென்று உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் முருகன் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த வேலையா மகள் மஞ்சுளா (23).
மஞ்சுளாவுக்கு காசநோய் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மஞ்சுளாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவுஏற்பட்டதால் அவரை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவர் முருகன் அழைத்து சென்றார்.
அங்கு மஞ்சுளாவை மஞ்சுளாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து அச்சன்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமணமான 10 மாதத்தில் இறந்ததாதல் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே வழங்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில்,மஞ்சுளா இயற்கை மரணம் அடைந்ததாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர்.
எனினும் உதவி கலெக்டர் விசாரணை நடைபெற உள்ளதால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே மஞ்சுளாவின் உடல் ஒப்படைக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளாவின் கணவர், உறவினர்கள் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ் பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply