தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக குற்றாலருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு மிகவும் அதிகமாக இருந்ததால் அருவிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பிகள் மற்றும் அருவிக்குச் செல்லும் பாதை முழுவதும் சேதமடைந்தது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்கும் பணி துவங்கியது. வெள்ளம் குறைந்தும் அருவியில் குளிக்க அனுமதிக்காததால் குற்றாலம் வர்த்தகர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த வாரம் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பழையகுற்றாலருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 28) பழையகுற்றாலருவியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து உற்சாகமாக சுற்றுலாப்பயணிகள் பழையகுற்றாலருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனாலும் பழைய குற்றால அருவிப்பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
Leave a Reply