பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் அட்டவணை மாற்றத்தால் மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் கிராஸிங்குக்காக ராஜபாளையத்தில் 40 நிமிடங்கள் காத்திருப்பது தவிர்க்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய ரயில்வே துறை சார்பில் ரயில்கள் இயக்கத்தில் கடந்தகால சூழல், கட்டமைப்பு மேம்பாடு, தேவைகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அட்டவணை மேம்படுத்தப்படும். அதன்படி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் (12661) இரவு 8.40 மணிக்கு எழும்பூரில் புறப்பட்ட நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் 30 நிமிடங்கள் முன்னதாக இரவு 8.10 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) செங்கோட்டையில் இருந்து மாலை 6.20-க்கு பதில் 6.45 மணிக்கு புறப்படுகிறது.
இதன்மூலம் மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ்பொதிகை ரயிலின் கிராஸிங்குக்காக ராஜபாளையம் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல ஆண்டு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயில்கள் அட்டவணை மாற்றம் குறித்து ரயில்வே தகவல் செயலியில் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து ராஜபாளையம் ரயில் பயணிகள் சங்கத் துணைத் தலைவர் ஜெகநாதராஜா கூறுகையில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம் காரணமாக மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் ராஜபாளையத்தில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், தென்காசி மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். அதேபோல் சென்னை கொல்லம் ரயில் நேர மாற்றம் காரணமாக சென்னையில் இருந்து 8 மணி நேரம் 50 நிமிடத்தில் ராஜபாளையம் வந்தடையும், என்றார்.
Leave a Reply