புளியங்குடியில் சாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம்
போலீசில் ஒப்படைத்த விவசாயி
தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (50) விவசாயி. இவர் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தார்.
இதையடுத்து மஞ்சள் பையை எடுத்து பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் ரூ.500 நோட்டு கட்டாக இருப்பதை கண்டார். இதனை தவற விட்ட நபர் யாரோ? அவர் எப்படி பணத்தை தொலைத்து விட்டு தவித்து இருப்பார்? என்று எண்ணிய அவர் அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில் சாலையில் கிடந்த மஞ்சள்பை குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து உரியவர் யார்? என விசாரித்துள்ளார்.
ஆனால் தவறவிட்ட நபர் யார் என்பது உடனடியாக தெரியாத நிலையில் நேர்மையுடன் ரூ.5 லட்சம் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பையை புளியங்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தார்.
விவசாயி தங்கச்சாமியின் நேர்மையை கண்டு இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், பாராட்டினார்.
அப்போது ரூ.5 லட்சத்தை சாலையில் தவறவிட்ட நபர், புளியங்குடி காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையில் அவர் புளியங்குடி நாட்டாமை அருணாசலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மளிகை கடைக்காரர் பாலமுருகன் (44) என்பதும், அவர் தனது நகைகளை வங்கியில் அடமானம் வைத்திருப்பதும் அதனை மீட்பதற்காக மஞ்சள் பையில் ரூ.5 லட்சத்துடன் பைக்கில் வங்கிக்கு சென்றபோது மஞ்சள் பை சாலையில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனிடம் ரூ.5 லட்சம் ஒப்படைக்கப்பட்டது.
சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்திற்கு ஆசைப்படாமல் அதனை உரியவரிடம் ஒப்படைத்த தங்கச்சாமி மற்றும் அவரது மனைவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் பாராட்டி சால்வை அணிவித்தார். இதுபோல் பாலமுருகனும், விவசாயி தங்கச்சாமியின் நேர்மையை பாராட்டி பழங்கள் வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது எஸ்.ஐ.மாடசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர். விவசாயியின் நேர்மையான செயலை அறிந்து பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Leave a Reply