Advertisement

செங்கோட்டை – புனலூர் அருமையான ரயில் பயணம்

தமிழகத்தில் இரண்டே ரயில் சுற்றுலா பயணம் உள்ளது .ஒன்று நீலகிரி ரயில் மற்றொன்று தென்காசி ரயில்.

அழகிய ரயில் பாதைகள் உலகில் பல இருக்கலாம். அப்படிப்பட்ட ரயில் பாதைகளில் ஒன்று தமிழகத்திலும் இருக்கிறது, அது தென்காசி மாவட்டம் ‘செங்கோட்டை- கொல்லம்’ ரயில் பாதை. பசுமை செழித்து பச்சையாகப் பூத்துக்கிடக்கும் காட்டைக் கிழித்தபடி மலையின் மீது, ஒரு மலைப்பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்லும் அந்த ரயில் பாதை அழகின் ஊற்று; உற்சாகத்தின் மறுவடிவம். அதேநேரம், மகிழ்ச்சிக்கும் பிரமிப்புக்கும் இணையாகத் திகிலையும் மிரட்சியையும் தரக்கூடியது அந்தப் பாதை.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

இப்பயணத்தின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதுடன், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைகள், மலைகளை இணைத்துச் செல்லும் பாலங்கள் என, பயணமே மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள சிறப்பான இயற்கைக் காட்சிகள் கொண்ட ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று

குகைகளும், பாலங்களும்!

இந்த இடைப்பட்ட 49.38 கி.மீ. தூரத்திற்கான ரயில் பாதையில் ஏற்கனவே இருந்த நூற்றாண்டை கடந்த 5 குகைகளுடன், புதிதாகக் குடையப்பட்ட ஒரு குகையும் சேர்ந்து 6 குகைகளும், 23 பெரிய பாலங்களும், 178 சிறிய பாலங்களும் உள்ளன.

யோசித்துப் பாருங்கள்! இப்பகுதி எப்படியிருக்கும் என்று!….

இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான கற்பகாலங்கள் மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டவைதான். இவற்றை எல்லாம் கடந்தபின். அழகிய மலைகளின் நடுவே ரயில் சென்று புனலூர் ரயில் நிலையத்தை அடைகிறது.

இந்த 49.38 தூர ரயில் பாதையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளது. இதில் 52 வளைவுகள் 10 டிகிரியிலும், 5 வளைவுகள் 12.3 டிகிரியாவும் உள்ளது. அதனால் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்தான் ரயில்கள் செல்லும்!

தென் தமிழகத்தின் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோயில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கேரள மாநிலத்தின் புனலூர் கொல்லம் பகுதிகளுக்கு செல்லும் சரக்குகளும் இத்தடத்தில்தான் முன்பு போல், இனிமேலும் கொண்டு செல்லப்படும்.
இனி வரும் நாட்களில் திருநெல்வேலி பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள், இந்த ரயில் பயணத்தையும் திட்டமிட்டு வருவது நல்லது!

50 கி.மீ. தூரத்திற்குள் கம்பீரமான மலைகள், அழகிய பசுமையான மலைச்சரிவுகள், மனதைக் கவரும் பள்ளத்தாக்குகள், சலசலவென தவழ்ந்தோடும் சிறு நீரோடைகள், எப்போதுமே மழைச்சாரல் விதவிதமான பாலங்கள், திகைப்பூட்டும் குகைகள் என வியப்பையும், மகிழ்ச்சியையும் ஊட்டும் இனிய பயணமாக இருக்கும்! வாழ்க்கையில் கட்டாயம் ஒருமுறையேனும் இந்த தென்காசி ரயில் பயணத்தில் பயணம் செய்யுங்கள்.

தென்காசி – கொல்லம் ரயில்வே காட்சிகளை பின்னர் ஒரு பதிவில் பதிவிடுகிறேன்.

ஜெயம் படத்தில் வரும் வண்டி வண்டி ரயிலு வண்டி இப்பாடலில் வரும் காட்சிகள் அனைத்தும் தென்காசி ரயில் பயணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *